Thursday, July 16, 2009

சுழல் சக்கரம்

அப்ப எனக்கு எட்டு வயதிருக்கும். அந்த வயசிலை நடந்ததெல்லாம் உங்களுக்கெண்டா மறந்து போயிருக்கும். ஆனா எனக்கு அப்பிடியில்லை. 1987 ஆம் ஆண்டு எங்களுக்கு மறக்கேலாது. எங்கடை ஊரிலை தாங்கள் 56 இலை அடி வாங்கினாங்கள் 83 இலை வாங்கினாங்கள் எண்டு ஒரு பெருமையோடை சொல்லுவினம். அடி வாங்கிறதிலும் பெருமை இருக்குத் தானே!!

அப்ப வடமராட்சியிலைதான் தொடங்கினது. அப்ப எனக்கு வடமராட்சி எங்கை கிடக்கு எண்டு தெரியாது. ஆனா வடமராட்சி எண்டா வடக்குப் பக்கம் இருக்கும் எண்ட அளவு எனக்குத் தெளிவிருந்தது. ஒப்பரேசன் லிபரேசன் எண்டுதான் அப்ப உதயன் பேப்பர் எழுதினது. உதயன் பேப்பரையே எழுத்துக் கூட்டி வாசிக்கிற எனக்கு ஒப்பரேசன் எண்டால் என்னவெண்டும் தெரியாது. லிபரேசன் எண்டா என்னவெண்டும் தெரியாது.


இப்பிடித்தான் அண்டைக்கு வானத்திலை பெரிய சத்தம். இஞ்சை போகுது அங்க போகுது எண்டு எல்லாரும் கத்தினவையே ஒழிய ஒருத்தரும் கண்ணாலை கண்டமாதிரித் தெரியேல்லை. கள்ளுச் சீவுற இராசே்ந்திரம் மாமா சொன்னார் தன்ர மரத்தை ஒரு எத்து எத்திப்போட்டுதெண்டு. ஒரு பிளேன் வந்து ஐஞ்சாப்பிரிந்து பறந்தாய்த்தான் அவர் சொன்னவர். தோட்டம் சாறிக் கொண்டிருந்த சுப்புறு மாமா அந்தப்பிளேன் மூண்டா பிரிஞ்சு போனதாக தான் சொன்னார். ஆனாலும் நாங்கள் இராசேந்ததிரம் மாமாவை தான் நம்பினது. அவர்தானே மரத்திலை நிண்டு பிளேனை கிட்டவாய் பார்த்தவர். அவர் சொன்னதுதான் சரியா இருக்கும்.

அண்டைக்கு பிளேன் போட்ட மூட்டை கூரையிலை விழுந்து ஒரு வீடு உடைஞ்சு போச்சு. ஆனா எல்லாருக்கும் புளுகம். குடுக்கிறதெய்வம் கூரையை பிச்சுக் கொண்டு குடுக்கும் எண்டு சந்தோசப் பட்டினம். இந்தியாக் காரன் எங்களை ்கைவிடமாட்டான் எண்டு திரவியம் அக்கா சொல்லிக் கொண்டு திரிஞ்சது. முந்தியெண்டா திரவியமக்காவின்ர கதையை ஒருத்தரும் கணக்கெடுக்கிறதில்லை. குடிகாரத் திரவியம் எண்டாலே அவ பேசேல்லை அவக்குள்ள போனவர்தான் பேசுறார் எண்டு அர்த்தம். ஆனா அண்டைக்கு திரவியமக்காவின்ர கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

என்ன நடந்துதோ தெரியாது எல்லாரும் கோயிலுக்கு ஓடுங்கோ எண்டாங்கள். கோயிலுக்கு போறதெண்டா குளிச்சு முழுகி எல்லோ போகோணும். ஆனா அண்டைக்கு ஒருதரும் குளிக்கவும் இல்லை. சாப்பிடவும் இல்லை. கோயிலுக்குள்ளை ஒரே சனம். மஞ்சலாட்டிலை தேருக்கு கூட இவ்வளவு சனம் வந்ததில்லை. ஒருத்தரும் வெளியே போகப்படாதெண்டாச்சு. பாயும் தலையணையும் காவிக்கொண்டு எல்லாரும் ஒரே அடிபிடி. அண்டைக்கு எனக்கு ்நித்திரை வரவில்லை.

எத்தினை நாள் எண்டு எனக்குத் தெரியாது. சூரியன் சந்திரன் வந்தது போனது கூட தெரியாது. இடைக்கிடை சடசட எண்டு சூட்டுச் சத்தம் மட்டும் கேட்கும். ஒரே பசி. கிடந்த பிஸ்கட் உழுத்தம்மா எல்லாம் நேற்றையோடையே முடிஞ்சு போச்சு. வீச மாமாதான் ஏதோ ஓடியாடித்திரிஞசார். கஞ்சி காய்ச்சப்போகினமாம் எண்டு கதை அடிபட்டது. பெண்டுகள் எல்லாம் தேங்காய் துருவிக் குடுத்தினம். காளாஞ்சி அறைக்குள்ள இருந்த சாமானிலை தான் உதெல்லாம் நடந்தது. ஐயரும் ஒண்டும் பறையேல்லை. அமுதன் ஓடிப்போய் சிரட்டை பொறுக்கினான். மொக்கன். வெளியிலையே போக விடுறாங்கள் இல்லை. உவன் சிரட்டை பொறுக்கி என்னெண்டு விளையாடப்போறான்.??


கஞ்சி காய்ச்சி முடிஞ்சது. கிடாரத்துக்குள்ள மேலும் பச்சைத் தண்ணியை ஊத்தினாங்கள். நான் நினைச்சன் ஒரு கிடாரம் கஞ்சி ஆற நேரம் எடுக்கும். அதாலை தான் சூட்டை குறைக்க தண்ணி ஊத்துறாங்கள் எண்டு. அமுதன் சொன்னான் எட மொக்கா இரண்டு கிடாரம் கஞ்சியும் இருக்கிற சனத்துக்கு குடுக்க காணாது அதாலைதான் தண்ணி ஊத்துறாங்கள் எண்டு.

குழந்தப்பிள்ளையள் முதலிலை வாங்கோ..

வீச மாமாதான் கொமாண்டிங்.
விழுந்தடிச்சுக் கொண்டு ஓடியாச்சு. கிட்டே போனபிறகுதான் விளங்கினது கஞ்சி இன்னும் சூடாறவில்லை. அதைவிட ஓடின அவசரத்திலை ஒரு பாத்திரமும் கொண்டு போகவில்லை. முழுசியடிச்சுக் கொண்டு நிற்கேக்கை அமுதன் தன்ர சிரட்டையிலை ஒண்டை தந்தான். கஞ்சி குடிச்சு முடிய பசி இன்னும் கூடியிற்றுது.

சடசட என சத்தம்.
ஐயோ என்ர பிள்ளை எண்டு யாரோ ஒரு மனிசி குளறிச்சு.
கர்ப்பகிரகத்திலை இருந்த மாது அக்காவுக்கு காயமாம். தூக்கிக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்திச்சினம். ஒரே ரத்த வாடை. கையிலை காயம். என்ர பசி பறந்து போச்சு. தூக்கமும் தான்.


உந்த களேபரம் எல்லாம் முடிய அம்மா சொன்னா எட கவனமா படியடா ஸ்கொலசிப் சோதனை வருதெண்டு.

எனக்கு அவ்வளவா படிப்பு ஓடாது. ஸ்கொலசிப் பாஸ்தான் . ஆனா ஏ எல் அவ்வளவு நல்லமில்லை. அமுதன் டொக்ரராயிட்டான்.

அமுதனை கன காலத்துக்கு பிறகு அகதி முகாமிலை கண்டன். போன மாசம்தான். அவன் டொக்ரர். நான் என்ஜிஓ. சின்னப்பிள்ளையள் முன்னுக்கு வாங்கோ. நான் சொல்லிக் கொண்டிருந்தன். வீச மாமாவின்ர இடத்திலை நான். என்ர இடத்திலை யாரோ ஒரு சின்னப் பெடியன்.
அண்ணை அண்ணை 10 நாளா சாப்பிடேல்லை.

இந்தியா கைவிடாது எண்டு சொல்லிக் கொண்டே திரவியக்கா செத்துப்போனாவாம்.


3 comments:

கிருஷ்ணா said...

இப்பிடித்தான் நிறையப்பேருக்கு அனுபவங்கள் இருக்கு. ஆனா இண்டைக்கு உவங்களாலதான் எல்லாம் வந்தது எண்டெல்லே சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.

Sivamoorthy Kishokumar said...

வணக்கம் குரு.
“நிலாமுற்றம்” என்றொரு புதிய முயற்சி.
இலங்கை பதிவர்களின் சங்கமம்.

உங்களது பதிவை நிலாமுற்றத்தில் பகிர்ந்து, நிலாமுற்றத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் தொடுத்து எம் முயற்சிக்கு தோள் கொடுங்களேன் தோழரே..!

http://www.nilamuttram.com/

நட்புடன் கிஷோர்

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

கட்டாயம்