Sunday, August 23, 2009

அடுத்த சீட்டிலை ஆச்சி!!!

நான் அப்ப குமரா இருக்கேக்கை நடந்தது எண்டு ஆச்சி சொல்லத் தொடங்கேக்கையே எனக்கு சுவாரசியம் பிடிபட்டுப்போச்சு. குமருகளின்ர கதையை கேட்கிறதெண்டா அது கிளுகிளுப்பாத்தானே இருக்கும். ஆச்சிக்கு இப்ப 75 அல்லது 80 வயதிருக்கும். ஆனா அவவின்ர மனதிலையும் நினைவுகள் பசுமரத்தாணியாக இருந்தே இருக்கிறது.

ஏ நைன் பாதை திறந்திட்டாங்களாம் எண்டது காட்டுத் தீபோல பரவினாலும் அது உண்மையா பொய்யா எண்டு கனபேருக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்திலை இருந்து வரலாமாம் ஆனா இங்கையிருந்து போக ஏலாதாம் எண்டது ஒரு பகுதி! அங்கையிருந்து வந்தாக்கள் மட்டும் திரும்பி போகலாமாம் எண்டது ஒரு பகுதி! இல்லை அரச உத்தியோகத்தர்கள் மட்டும் போகலாமாம் ஆனா போம் நிரப்பி கிளியரண்ஸ் எடுக்க வேணுமாம் எண்டது இன்னொரு பகுதி. இல்லை இல்லை பழைய கப்பல் துண்டு அல்லது பிளேன் ரிக்கட் இருந்தா போகலாமாம் எண்டது ஒரு பகுதி! யாருக்கும் எப்பிடி போறதெண்டது சரியா சொல்லத் தெரியேல்லை.

வவுனியா வந்தாச்சு. ஓடிப்போய் காலமை 10 மணிபோல டோக்கனும் எடுத்தாச்சு! இரண்டு மணிபோல பஸ் ஏற வாங்கோ எண்டு சொன்னாங்கள். எதுக்கும் 1.45 க்கே நாங்கள் வந்திட்டம். முதலாவது பிளைட் எண்டா 20 மயில் (அட ஆயிரம் ரூபா பாருங்கோ) குடுக்கிறதெண்டதை விட அவையள் வரச்சொல்லுற அதிகாலை 3.30க்கு வாறதுதான் சனங்களுக்கு பெரிய கஸ்டமான விசயம். அதிலும் பிளைட் எப்ப எடுப்பான் எண்டே தெரியாமல் காத்துக்கொண்டு 10மணிவரைஇருக்கிறதைவிட இங்கை 5 மணி பஸ்க்கு 2 மணிக்கு வாறது என்ன பெரிய விசயமே! யாரும் விசயம் விளங்காதவை யெண்டா அது என்ன 5 மணி பஸ்க்கு 2 மணிக்கே போறது எண்டு கேப்பினம். அவையள் பிளைட்டுக்கும் கப்பலுக்கும் பதிஞ்சு அலைஞ்ச அனுபவம் இல்லாத ஆக்கள் கண்டியளோ!!!

நானும் பரமனும் தான் ஏ9 ஆலை யாழ்ப்பாணம் போறதெண்டு கொழும்பிலை இருந்து வவுனியா வெளிக்கிட்டது. பஸ்க்கை எனக்கு அடுத்த சீட்டிலை ஆச்சி இடம் பிடித்தா. நான் யன்னல் கரை!!!!

நீண்ட தூரப் பயணம். ஒரு பேச்சுத் துணைக்கு ஆராவது அம்பிடவேணுமே. ஆச்சி அம்பிட்டா.

ஆச்சி நல்லா கடவுளைக் கும்பிடணை வடிவா ஊர் போய் சேர வேணும் எண்டு.

ஓமப்பு கடவுள் கைவிடமாட்டார். அவர்தானே பாதையை திறந்து தந்தவர்.

ஆச்சி துணிவாகவே இருந்தது.

ஆச்சி தேங்காய் வேண்டி வைச்சிருக்கிறியே முறிகண்டிப் பிள்ளையாருக்கு அடிக்கவோ.இல்லாட்டா பிள்ளையார் கோவிச்சுப் போடுவார்.!!

என்னப்பு கதை சொல்லுறாய் எத்தினை வருசமாய் நாங்கள் பிள்ளையாரை ஆதரிச்சனாங்கள். நாங்கள் வன்னிக்கை வந்த காலமிருந்து பிள்ளையாரோடைதான்.

ஆச்சி கனகாலமாய் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கேல்லை. பிள்ளையார் கோவப்பட்டு யானையை அனுப்பப் போறார்.

அப்பதான் ஆச்சி கதை சொல்லத் தொடங்கியது. நாங்கள் வந்தது வன்னிக்கை 50 வருசத்துக்கு முன்னர் அப்பன். அப்ப நான் கட்டாத குமர். ஒருநாள் உப்பிடித்தான் என்னை தனிய விட்டிட்டு அப்பும் ஆச்சியும் எங்கையோ போட்டினம். இரவு வெளியிலை ஒரே சத்தம் . எட்டிப்பார்த்தா யானை. தனியன் யானை. பயந்து போனன். கத்திக்கொண்டு நெருப்பு மூட்டி மணியடிச்சன். யானை பயந்து ஓடியிட்டுது. என்ர குறளலைக் கேட்டுத்தான் அது ஓடினதா அண்டையயல் சொன்னது. பேந்து அண்டைக்கு அண்டையயல் முழிச்சிருந்து காவல் காத்தது.

ஆச்சி இவ்வளவு துணிச்சலாய் இருந்திருக்குது. ”ஆச்சி லவ் பண்ணியே கலியாணம் கட்டினது?” கொஞ்சம் கனமான கேள்வி எண்டாலும் நேரிலே கேட்டு வைத்தேன்.

இல்லையப்பு பேசிச் செய்தது.

உந்த விசயத்திலை ஆச்சி கொஞ்சம் பொய்சொன்னதாகவே எனக்குப் பட்டது.

எத்தினை பிள்ளையள் ஆச்சி

மூண்டு

என்ன செய்யினம்?

முகாமுக்கை தான் தம்பி!!

அப்ப ஆச்சியை மட்டும் வெளியிலை விட்டவையே?

இல்லையப்பன் நான் கண் ஒப்பிறேசன் செய்யவந்தாப்போல இங்காலை அம்பிட்டிட்டன். பிள்ளையள்தான் பாவம் அங்கை ஓடி இங்கை ஓடி கடைசியா உங்கை முகாமிலை இருக்குதுகள்.


டிக்கட் டிக்கட்
கொண்டக்டர் டிக்கட் கிழிக்க தொடங்கியிருந்தார்.

ஆச்சி உனக்கு நான் டிக்கட் எடுக்கட்டே.
முகாமிலை பிள்ளையள் எண்டு கேட்டதாலை வந்த உணர்வா எண்டு தெரியவில்லை.

ஆச்சி வேணாம் எண்டிட்டுது.
காசு கிடக்கப்பன். ஏதோ பாதை திறந்திருக்கிறதாலை முகாமிலை இருக்கிற பிள்ளையளை பார்க்க கூடியதா இருக்கு.

உண்மைதான்
ஆச்சி பிளைட் எடுத்தா யாழ்ப்பாணத்தால வர முடியும்?


ஆச்சி அடுத்த கிழமையும் முகாமிலை இருக்கிற பிள்ளையளை பார்க்க ஏ9 ஆலை வரும்.

ஆச்சி தேங்காய் உடைக்கவோ இல்லை நான் மூத்திரம் பெஞ்சு போட்டு முகம் கழுவவோ முறிகண்டியில் பஸ் நிற்கவில்லை.

முறிகண்டியில் மட்டுமல்ல வன்னியின் வேற எந்த இடத்திலும்!!!!

22.08.2009