Wednesday, June 1, 2011

எங்கையெண்டு பார்த்துக்கொண்டிருக்கிறாங்கள்!

“இஞ்சை வா உன்னோடை ஓரு கதை” எண்டு கூப்பிடேக்கை எனக்கு விளங்கேல்லை. கூப்பிட்டவர் சோதியர். சிவயோகலிங்கத்தாரின்ரை கெமிஸ்ரி வகுப்பு நடந்துகொண்டு இருந்தது. சோதியர் இப்பிடி சும்மா வகுப்பை குழப்பி கூப்பிட மாட்டார். நாங்கள் அப்பத்தான் ஏ எல் படிக்கத் தொடங்கியிருந்தம். யோகலிங்கத்தாரின்ரை வகுப்பு கவனமாய்க் கேட்டுக்கொண்டிருக்க வேணும். தப்பித் தவறி நித்திரை கொண்டிட்டால்பேந்து அந்தாள் கேள்வி கேக்கேக்கை நிண்டுமுழுசோணும். முழுசிறது மட்டும் இல்லை. அவன் அப்பிடிப் படிச்சவன் இவன் இப்பிடிப் படிச்சவன் எண்டு உதாரணம் காட்டி பேசத் தொடங்கினால் எங்களுக்கும் பயம் பிடிக்காமல் வேறை என்ன செய்யும்?

விசயம் என்னெண்டு எண்டு தெரியேல்லை. நான் உவங்களிட்டை இந்தப் பெட்டையின்ரை பெயர் என்னவெண்டு கேட்டது தெரிஞ்சுதோ அல்லது மொக்குத்தனமா அந்தப்பிள்ளைக்கு யாரேனும் இருக்கினமோ எண்டு கேட்டது தெரிஞ்சுதோ தெரியாது. அவரும் அதைச் சொல்லேல்லை.

அந்த பழைய ஆண்டு 11 வகுப்பறைகள் வெறிச்சோடிப் போயிருந்தன. இங்கையிருந்து நாங்கள் அங்காலை போனாப்பிறகு ஒரு புது வகுப்பும் இங்கை தொடங்கேல்லை. வெக்கை குறைக்கவெண்டு வேய்ந்திருந்த உள் கிடுகுகளையும் தாண்டி எனக்கு வேர்த்துக் கொட்டியது.


அவரும் பிடி கொடுத்துப் பேசவில்லை. நானும் பிடி கொடுத்துப் பேசவில்லை.

உதுகளிலை மினக்கெடாதை! படி! எங்கையெண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாங்கள் உன்னை! உதுகள் பிறகும் வரும். உந்த இரண்டு வருசத்திலை விளையாடினியோ துலைஞ்சாய்!

அந்தாளை எதிர்த்தும் பேச முடியேல்லை! அவரே சுழட்டித்தான் கட்டினவர் எண்டு கதைக்கிறவங்கள். அவரே இப்பிடிச் சொல்லேக்கை!

எரிச்சலாய் இருந்தது. யாரோ தரித்திரம் பிடிப்பான் போய் அண்டியிருக்கிறான். உவங்களுக்கு எரிச்சல். நானே நடுங்கிப்போய் இருக்கிறன் என்னெண்டு அங்கை கேக்கிறதெண்டு! அதுக்குள்ளை இப்பிடிஎண்டா....

அண்டைக்கு பத்து நிமிசத்திலை திரும்பி வகுப்புக்கு போய்விட்டன். பாடம் ஒண்டும் விளங்கேல்லை!


அதுக்குப் பிறகு எங்கை பார்த்தாலும் அந்தாள் நிற்கும். சைக்கிள் பார்க் அடியில். தண்ணி குடிக்கும் இடத்தில். வாற போற வழியில்...எனக்கு எரிச்சலா வந்தது. பத்தி- வைச்ச துலைவான் ஆரெண்டு மட்டும் தெரிஞ்சா அவனைப் பிடிச்சு....அதுக்கு மேலை நான் சொல்ல மாட்டன்.


ஏதோ ஒரு வழியா கம்பசுக்கு போயிட்டன். யாழ்ப்பாணம் மாதிரியில்லை. பொம்பிளைப்பிள்ளையள் நல்ல வடிவு. வடிவைவிட ஸ்டைல் எண்டு சொல்லலாம். இஞ்சை மாதிரியில்லை. அங்கை பொம்பிளையளும் ஆம்பிளையளும் லெக்சர் ஹோலிலை கலந்துதான் இருக்கிறனாங்கள். சோடியள் சிலது ஒண்டோடை ஒண்டு சாய்ந்து நித்திரை கொள்ளும். ஒருத்தரும் ஒண்டும் சொல்லுறேல்லை.

முதலாவது பெரிய எக்சாம் வந்தது. ஒவ்வொருநாளும் நித்திரைகொள்ளேக்கை உந்தாள் வந்து கவனமடா! எங்கையெண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு சொல்லும். பயமா இருக்கும். சோதினை ஒருமாதிரி பாஸ்பண்ணியாச்சு!

லீவு கிடைத்து ஊருக்க வந்தேன். சோதியரையும் போய்ச் சந்தித்தேன். தேத்தண்ணி பிஸ்கட் எல்லாம் முடிய அந்தாள் சொன்னது “இனி எங்கையெண்டு பார்த்துக்கொண்டிருப்பாளவை கவனமடா!”

அந்தாள் சுழட்டித்தான் முடிச்சது. அவற்றை சொல்லை தட்டேலாது. இந்தமுறை அவர் சொன்ன அர்த்தம் கொஞ்சம் வேறை எண்டுமட்டும் விளங்கியது.

லீவு முடிய கம்பஸ் தொடங்கியது. சும்மா சொல்லக் கூடாது. சிங்களப்பிள்ளையள் நல்லா மூ பண்ணிக் கதைக்குங்கள். நீங்கள் பிழையா அதை விளங்கக் கூடாது. எனக்கு நித்திரைக்கு போகேக்கை “ கவனமடா எங்கையெண்டு பார்த்துக்கொண்டிருப்பாங்கள்” எண்டது நினைவு வரும். அப்பிடி நினைவு வராட்டா கனவு வரும்.

அபி தே போமுத (நாங்கள் தேத்தண்ணி குடிப்பமா) முதன்முறையா அவள் கேக்கேக்கை யோசிச்சன். டேய் கவனமடா..அந்தவார்த்தைகள் காதுக்குள் கேட்டன. மம சல்லி கெவன்னங்! (நான் தேத்தண்ணி காசை குடுக்கிறன்) நான் தயங்கினதை பார்த்து அவள் சொன்னாள். நான் ஒரு கஞ்சப் பிசுநாறி உண்டு அவளுக்கும் தெரிந்திருதது.

பைனல் ஒருமாதிரி பாஸ் பண்ணியாச்சு!

ஊருக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். பத்தும் பலதும் கதைத்தபின்னர்... இந்தமுறை அவர் அதைச் சொல்லவில்லை. ஆனாலும் சொன்னமாதிரிக் கேட்டது. பிரமையோ!

இரவு படுக்க நேரமாகிவிட்டது. “ கவனமடா! எங்கையெண்டு பார்த்துக்கொண்ருப்பாங்கள்” கனவோ நினைவோ தெரியவில்லை. முழித்துக்கொண்டேன். இரவு மூட மறந்திருந்த கொம்பியுட்டரில் இளம் யுவதியிடம் பலர் பலலட்ச ரூபா இழப்பு எண்டு செய்தி பதிவாயிருந்தது.

அதிகாலை மஞ்சலாட்டு மணி டாண் டாண் டாண் டாண் டாண் என அடித்து ஐந்து மணி என்று அறிவித்தது!!!

06.07.2011