Sunday, May 25, 2014

மறைந்து போன மச்சாள்!

மரணப்படுக்கையில் படுத்திருக்கும் கிழவருக்கு உறவுகள் பாலூற்ற உயிர் அடங்குவதாக ஊரில் சொல்லிக்கொள்வர். ஒவ்வொரு சொட்டுப் பால் ஊற்றும்போதும் நான் மகன் ஊற்றுகிறேன் மகள்   ஊற்றுகிறேன் எனும்போதெல்லாம் உம் கொட்டிய கிழவர் நான் மச்சாள் ஊற்றுகிறேன் என்றவுடன் எழும்பி இருந்ததாக கேலியாகப் பேசிக்கொள்வர்.

இந்தியத் திரைப்படங்களில் காட்டுவதுபோல மாமனைக் கல்யாணம் செய்வது அல்லது மச்சாளைக் கட்டுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் யாழ்ப்பாணத்தாரிடையே குறைவெண்டாலும் தங்கச்சிமுறையான பெண்கள் பழுகுவதுபோல மச்சாள் முறையானதுகள் பழகுறதில்லை! அவையளுக்கு வெக்கம்.

என்ரை அப்பாவழியாலை ஒருமச்சாள் இருந்தாள். அவவின்ரை மூத்த மகளுக்கு என்னைவிட இரண்டு வயது கூட! அப்ப பாருங்கோவன்!

அங்கை மச்சாள் இருக்கு இங்கை மச்சாள் இருக்கு எண்டாலும் நந்தியற்றை கதையிலை வாறமாதிரி ஒரு இராசாத்தி மச்சாளும் என்ரை வீட்டுக் கிட்ட இருக்கேல்ல.

எங்களுக்கு நல்லாத் தூரத்திலை இருந்த மச்சாள்தான் சியாமினி. மச்சாளைப் பற்றிச் சொல்லமுன்னம் என்ரை மாமாவை பற்றிச் சொல்லத்தான் வேணும். எங்கடை அம்மாவின்ரை இரண்டாவது தம்பிதான் என்ரை சின்ன மாமா. நாங்கள் வளர்ந்து வரமுன்னமே அவர் வெளிநாடு போட்டார் எண்டாலும் அவரை எனக்கு நல்லா நினைவிருக்கு! கீரிமலைக்கு காரிலை ஏற்றிக் கொண்டுபோய் நான் குழற குழற கேணியிலை முக்கி எடுக்கற அவரை எப்பிடி மறக்கிறது. கொழும்பிலை அப்பாவும் கிழக்கு மாகாணம் கல்முனையிலை அம்மாவும் வேலைபார்க்கிற என்னைப்போன்ற குழந்தையளுக்கெண்டே கடவுள் அனுப்பின அட்சய பாத்திரம்தான் சின்ன மாமா.

நான்நினைக்கிறன் எனக்கு நாலு வயதிருக்கேக்கை மாமா ஜேர்மனி போட்டார். எல்லாரையும் மாதிரி போய் இறங்கி கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் வீட்டுக்கு திரும்பி வர ஏலாத நிலையிலைதான் அவர் இருந்தார்.

1987...
மாமாவேடை திரிஞ்ச சத்திமாமா குமார் மாமா எல்லாரும் காணாமல் போயிட்டினம். அவையளை இந்தியன் ஆமிதான் சுட்டது எண்டவை! ஆனா பொடி கிடைச்சதாய் தெரியேல்லை. மாமா பெரிசா காசைக் கீசை அனுப்பாட்டிலும் அங்கை உயிர் தப்பி இருந்ததே பெரிய விசயம் எண்டு அம்மம்மா சொல்லுறவ.

இந்த பிரச்சனை மூட்டந்தான் சின்னமாமாவுக்கு கலியாணம் நடந்தது. இப்ப மாதிரி இன்ரநெற்றோ ஸ்கைப்போ இல்லாத காலம் அது. மாமாவின்ரை கலியாணவீட்டுப்படம் கிட்டத்தட்ட மூன்று மாதத்துக்கு பிறகுதான் இடம்பெயர்திருந்த எங்கடை கைக்கு வந்நது. படத்தை பார்த்துதான் அம்மம்மாவுக்கு தன்ரை மகனுக்கு கலியாணம் நடந்ததே தெரிந்தது. பேந்தென்ன! வழமையான யாழ்ப்பாணத்துச் சண்டைதான்.

சண்டையை தீர்க்கப் பிறந்தவள்தான் சியாமினி! அவள் பிறந்து அனுப்பிய படத்துடன் அம்மம்மாவின் உலகமகாயுத்தம் ஓய்வுக்கு வந்தது.

இன்பமும் துன்பமும் சுழல் சக்கரம் எண்டது தெரிய பெரிய புராண ஆகமங்கள் படிக்கத்தேவையில்லை. மாமாவின்ர கதையை கேட்டாலே காணும்! மச்சாளுக்கு இரண்டு வயதாகமுன்னம் சின்னமாமா விபத்தில் இறந்துபோனார்.

மச்சாளை மாமி வளந்தெடுக்க தொடங்கினா.

மச்சாள் பெரியபிள்ளையாகி மாமி படம் அனுப்பியிருந்தா. சும்மா சொல்லக்கூடாது. மச்சாள் கிளி மாதிரித்தான். அந்தப் படத்தை பார்த்திட்டு என்னோடை கம்பசிலை படிச்ச ஒருத்தன் என்க்குப்பின்னாலை திரிஞ்சவனெண்டா பார்த்துக் கொள்ளுங்கோவன்.

மச்சாள் நல்ல அமைதியான பிள்ளை எண்டு வெளிநாட்டாலை வாற ஆட்கள் சொல்ல அம்மம்மா குளிர்ந்துபோவா!


2006ஆம் ஆண்டு மச்சாள் இலங்கை வந்தா! ஏ9 பாதையை திறந்துவைத்திருந்த அனைவரினது புண்ணியத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா கொழும்பு வந்தா! மச்சாள் வரமுன்னம் அவவை பார்க்கோணும் எண்டிருந்த அம்மம்மாவும் இயற்கை எய்தீட்டா. ஆக மாமாவின் மகளை பார்க்க அம்மாதான் வரமுடிஞ்சது.


சும்மா சொல்லக்கூடாது. அழகு மட்டுமில்லை அமைதியான மச்சாள்தான் சியாமினி. வேலையில்லாப் பட்டதாரியாக இருந்த நான் எல்லாரையும் லைன் பஸ்ஸிலை ஏற்றி அப்பத்தான் மக்களுக்கு திறந்து விட்டிருந்த கோல்பேசுக்கு கூட்டிக்கொண்டு போகேக்கையும் முகஞ்சுழிக்காம வந்தவதான் சியாமினி!

எண்சோதிடம் எல்லாம் பொய் எண்டு ஏன் நான் சொல்லுறனான் எண்டா நானும் மச்சாளும் ஒரே டேட் ஒவ் பேர்த். மச்சாள் அமைதியும் அழுகும்! என்னை நீங்கள் கண்டிருக்கிறியள்தானே! இப்ப நீங்களும் சொல்லுவியள் ஒரே நம்ப் ஆக்கள் ஒரே மாதிரி இருக்காயினம் எண்டு!

அண்டைக்கு அதிகாலை 4 மணிக்கு கோல் வந்தது. மச்சாள் கான்சரிலை செத்துப்போனாவாம் எண்டு. நான் நம்பேல்லை! வேலைகூடினதாலை எனக்கு வந்த கெட்ட கனவெண்டுதான் நினைச்சன்.

என்ரை மனிசியும் அப்ப கோல் பண்ணிச்சுது. விசயம் உண்மைதான்.

மச்சாளுக்கு என்னைவிட பத்து வயது குறைவு!

மருத்துவம் படிச்ச என்னட்டையே அவள் மறைச்சுப் போட்டாள்! மறைஞ்சு போயிட்டாள்!

No comments: