வடலிப்பனையெல்லாம் வளர்ந்து பெரிதாகி
திடல் அடர்ந்து நெருக்கம் தெரிகிறது - தலைமுறிந்து
போன பனையெல்லாம் போகமுன்னர் தந்தவிதை
கானகத்தில் விளைந்த கதை!

சாகமுன்னம் நல்லவற்றை தந்திட்டம் எனுமகிழ்வில்
தாகம் இன்னும் சரியாக தணியாமல் - போனாலும்
எச்சம் புதுக்கதைகள் எழுதும் எனநினைப்பை
வைத்திருந்தால் எது வலி?
எங்கு தொடங்கினமோ எதில் போய்ச் சேரணுமோ
தங்கிய இடம் வழிய தரவிருக்கு - கம்பெடுத்து
அடித்து பெறமுடியா அவையெல்லாம் நன்றாக
படித்துப் பெறவேணும் பார்.